பயங்கரவாதத்தை எதிர்க்க முடியாவிட்டால் சொல்லுங்கள், நாங்கள் உதவுகிறோம்: பாக்.கிற்கு ராஜ்நாத்சிங் அறிவுரை

பயங்கரவாதத்தை தனியாக எதிர்க்க முடியவில்லையென்று பாகிஸ்தான் கருதினால் இந்தியா உதவ தயாராக இருப்பதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-03 02:54 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம்  ஜெய்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:- “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்விவகாரம் குறித்து எந்த விவாதமும் தேவையில்லை. பிரச்னையெல்லாம் பயங்கரவாதம் மட்டுமே. அதுகுறித்துதான் பாகிஸ்தான் பேச வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் உதவியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. எனவே, பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தனியாக கையாள முடியவில்லை என்று அந்த நாடு கருதினால், இந்தியாவின் உதவியை கோரலாம். இதனை, அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு  கூறிக் கொள்ள விரும்புகிறேன். நமது நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக நான் கூற விரும்பவில்லை. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழவில்லை.

காஷ்மீர் மாநிலத்துக்குள் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அங்கும் தற்போது நிலைமை மேம்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. நமது நாடும், நாட்டின் எல்லைகளும் பாதுகாப்பாக உள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில், நக்சல் தீவிரவாதம் முற்றிலும் களையப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்