பா.ஜனதாவிற்கு மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளனர் - சசிதரூர் கிண்டல்

பா.ஜனதாவிற்கு மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளனர் என சசிதரூர் கிண்டல் அடித்துள்ளார்.

Update: 2018-12-12 12:34 GMT
புதுடெல்லி,

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது நெட்டிசன்கள் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்தனர். பா.ஜனதா சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தோல்வியடைந்ததை மையப்படுத்தி மீம்ஸ்கள், விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பா.ஜனதாவின் நட்சத்திர பிரசார தலைவரான யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி பற்றி அதிகமான மீம்ஸ்கள் பரவி வருகிறது. யோகி ஆதித்யநாத் பிரசாரத்தின் போது ஐதராபாத் நகரின் பெயர் மாற்றப்படும் என்பது போன்ற பேச்சுக்களை வெளிப்படுத்தினார். இதனை குறிப்பிட்டு நீங்கள் வேண்டுமென்றால் காங்கிரஸ் பெயரை இப்போது பா.ஜனதா என்று மாற்றிக்கொள்ளுங்களேன் என்றெல்லாம் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

இதேபோன்று பிரதமர் மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று முன்னதாக பேசியதை மையப்படுத்தி இப்போது உங்கள் மாநிலத்திலே நீங்கள் இல்லாமல் ஆகிவிட்டீர்களே என்றெல்லாம் மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளது. வட இந்தியாவிலே இந்த அடியென்றால் தென்னிந்தியாவில் எப்படியிருக்கும்?; தண்ணீரில் மூழ்கிய தாமரை, சட்டென்று மாறியது வானிலை என்றெல்லாம் டுவிட்டர்வாசிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதேபோன்று வீடியோக்களும் வெளியாகி வருகிறது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் மக்கள் பா.ஜனதாவிற்கு முத்தலாக் கொடுத்துள்ளனர் என கிண்டல் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இன்று பா.ஜனதா அப்செட் ஆவதில் எந்தஒரு அதிர்ச்சியும் கிடையாது. வாக்காளர்கள் அவர்களுக்கு இப்போது முத்தலாக் கொடுத்துள்ளனர்,” என கூறியுள்ளார்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் பா.ஜனதா தோல்வியை தழுவியதை குறிப்பிட்டு இவ்வாறு கேலி செய்துள்ளார். இதுபோன்று நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்