தற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து

தற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம் என்று மெகபூபா முப்தி கருத்து தெரிவித்தார்.

Update: 2018-12-15 01:56 GMT
ஸ்ரீநகர்,

87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன.

இதனால், யாருடன் சேர்ந்து யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்ததால், ஏறக்குறைய 88 நாட்கள் ஆளுநர் ஆட்சி நடந்தது. இதற்கிடையில், பலகட்ட பேச்சுக்குப்பின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது.  ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து வந்த கருத்து மோதல் கடந்த ஜூன் மாதம் பகிரங்கமாக வெடித்தது.

அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இதனால் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்து விட்டது. தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி மேலும் கூறுகையில், “  பாஜகவுடன் கூட்டணி அமைப்பது எங்கள் கட்சியை தற்கொலையில் தள்ளும் என எங்களுக்குத் தெரியும். ஆகவே அனைத்து விஷயங்களையும் நாங்கள் தள்ளி வைத்தோம். பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பவர்களாக எங்கள் கட்சி பார்க்கப்பட்ட நிலையில், இந்த தருணத்துக்கு பொருத்தமானவராக மோடி இருப்பார் என நாங்கள் கருதினோம். வாஜ்பாய்க்கு இல்லாத பெரும்பான்மை பலம் மோடிக்கு இருப்பதால் அவர் பாகிஸ்தானிடமும், ஜம்மு-காஷ்மீர் மக்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவார் என நினைத்தோம். வாஜ்பாய் விட்டுச் சென்றதை மோடி தொடருவார் என நம்பினோம்.

வாஜ்பாய் பிரதமராகவும், எனது தந்தை முதல்வராகவும் இருந்த சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரே திசையில் பயணிப்பதாக கருத்து பரவியது. 2002-2005 வரையில் பொற்காலமாக இருந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்கு மோடி தீர்வு காண்பார் என நினைத்தோம். இதனால் பிடிபி கட்சிக்கு முடிவுரை ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக் கருதினோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்