இந்தியாவில் உணவு வீணாவதை குறைக்க நடவடிக்கை தேவை; குடியரசு தலைவர் பேச்சு

உணவு உற்பத்தி மிகை நாடான இந்தியாவில் உணவு வீணாவதை குறைக்க நடவடிக்கை தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Update: 2018-12-20 09:27 GMT
புதுடெல்லி,

புதுடெல்லியில் அனைத்து இந்திய உணவு பதப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசும்பொழுது, உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விவசாயிகள் பணம் பெறுவதற்கும், நுகர்வோர் பணம் செலுத்துவதற்கும் பெரிய அளவில் வேற்றுமை உள்ளது.  இதனை குறைக்க வேண்டிய தேவை உள்ளது.

வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் உணவு வீணாவதை குறைக்க வேண்டிய தேவையும் உள்ளது.

இந்தியாவில் இன்று உணவு பற்றாக்குறை என்பது இல்லை.  பல வேளாண் பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறைகளில் நாம் தன்னிறைவுக்கு கூடுதலாக பெற்றுள்ளோம்.

பொருளாதார பலன்களை விரிவான அளவில் கொண்டு செல்லும் நோக்கத்தினை நாம் இப்பொழுது வரைமுறைப்படுத்த வேண்டும்.  குறிப்பிடும்படியாக விவசாயிகளுக்கு அதிக அளவிலான பலன்களை தர வகை செய்ய வேண்டிய தருணம் ஆகும் என கூறியுள்ளார்.

அவர் ஐ.நா. அமைப்பின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி கூறும்பொழுது, ஒவ்வொரு வருடமும் 1.23 டிரில்லியன் (1 டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் மதிப்பிலான உணவானது தூக்கி எறியப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்