ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; எஸ்.பி. தியாகிக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முன்னாள் இந்திய விமான படை தளபதி எஸ்.பி. தியாகிக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2018-12-21 11:07 GMT
புதுடெல்லி,

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

இந்த வழக்கில் முன்னாள் இந்திய விமான படை தளபதி எஸ்.பி. தியாகிக்கு (வயது 73) தொடர்பு உள்ளது என புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி இந்த வழக்கில் தியாகி மற்றும் இங்கிலாந்து நாட்டவரான இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் ஆகியோரது பெயர்களை குற்றச்சாட்டு அறிக்கையில் குற்றவாளிகளாக சேர்த்து சி.பி.ஐ. பதிவு செய்தது.  இவ்வழக்கில் கூடுதலாக 9 பெயர்களும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் தியாகியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சுற்றறிக்கை (எல்.ஓ.சி.) அனுப்ப சி.பி.ஐ. முடிவு செய்தது.  இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் இந்த நோட்டீசை ரத்து செய்யும்படி உத்தரவிட்டார்.

இதுபற்றி தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மேலும் செய்திகள்