பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் 11 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை பயணம்

பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் 11 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Update: 2018-12-23 06:30 GMT
பம்பை,

சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் பெண் உறுப்பினர்கள் 11 பேர் செல்வி என்பவர் தலைமையில் கறுப்பு உடை அணிந்து சபரிமலைக்கு சென்றனர்.  பம்பை அருகே சென்றபொழுது அவர்களுக்கு பம்பை விநாயகர் கோவிலில் இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களில் 6 பெண்கள் தாங்களே இருமுடி கட்டிக்கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். 11 பெண்களில் 9 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.  இதனால் அவர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெண்கள் போலீசாரிடம் கேட்டு கொண்ட நிலையில், பெண்களை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்புக்காக நின்று கொண்டனர்.

இந்த நிலையில், பெண் பக்தர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.  இதனை தொடர்ந்து போலீசார் பக்தர்களை கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.

இதன்பின் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் 11 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இவர்கள் தமிழகம், மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்