கொள்ளையர்களை பிடிக்க ஆயுதங்களின்றி சென்று திரும்பிய 3 போலீசார் பணியிடை நீக்கம்

டெல்லியில் கொள்ளையர்களை பிடிக்க ஆயுதங்களின்றி சென்று திரும்பிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2018-12-26 13:32 GMT
புதுடெல்லி,

தெற்கு டெல்லியில் பண்ணை இல்லம் ஒன்று உள்ளது.  இங்கு தீபக் ஹடா (வயது 73) என்ற வர்த்தகர் மற்றும் அவரது மனைவி கிரண் (வயது 67) ஆகியோர் கடந்த 20 வருடங்களாக வசித்து வந்துள்ளனர்.

தீபக் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் 4 கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்து உள்ளனர்.  அவர்கள் கிரண் மற்றும் அவரது பணியாட்களை பணய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.

அதன்பின் அவர்கள் பணம் மற்றும் லட்சக்கணக்கான மதிப்புமிக்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர்.  இந்த நிலையில், கொள்ளையர்கள் தங்களது வேலைகளில் கவனம் செலுத்த வீட்டு பணியாளர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அவர் உடனே நேப் சராய் காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.  இதனை அடுத்து பணியாளருடன் 3 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  அங்கு சென்ற பின்பே அவர்கள் ஆயுதங்களை எடுத்து செல்ல மறந்து விட்டது தெரிந்தது.

இதனால் அவர்கள் பணியாளரிடம் கூடுதல் போலீசாரை அழைத்து கொண்டு திரும்பி வருவோம் என உறுதி கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஆனால் இதுபற்றி தங்களது மூத்த அதிகாரியிடம் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தினை அடுத்து நேப் சராய் காவல் நிலைய பணி அதிகாரி உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்