ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; சோனியா காந்தி தொடர்பு பற்றி பா.ஜ.க. செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகிறது

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்தி தொடர்பு பற்றி அனைத்து பா.ஜ.க. முதல் மந்திரிகள் செய்தியாளர்கள் சந்திப்பினை இன்று நடத்துகின்றனர்.

Update: 2018-12-31 06:10 GMT
புதுடெல்லி,

நமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கு வசதியாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்த பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல், “என்னிடம் விசாரணையின்போது, சோனியா காந்தி பற்றி கேள்வி எழுப்பினால், அதை நான் எப்படி எதிர்கொண்டு பதில் அளிக்க வேண்டும்?” என்று தனது வக்கீல்களிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்த தகவலை டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை வெளியிட்டது. இது ஊடகங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாரதீய ஜனதாவின் அனைத்து மாநில முதல் மந்திரிகள் மற்றும் மாநில தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பினை இன்று நடத்துகின்றனர்.  இதில், சோனியா காந்தியின் பெயரை இடைத்தரகர் மிசெல் கூறினார் என்று நீதிமன்றத்தில் அமலாக்க துறையினர் கூறியது பற்றி அவர்கள் பேசுகின்றனர்.

மேலும் செய்திகள்