10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.

Update: 2019-01-08 16:45 GMT
புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவின் மீது 4 மணி நேரம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு 3 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை வெளிநடப்பு செய்தார்.

இதன்படி 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை தொடர்ந்து மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்