சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குநராக இடமாற்றம்

மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பணியில் அமர்த்திய அலோக் வர்மா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-01-10 15:27 GMT
சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அலோக் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்து நியமிக்கும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுதான் எடுக்க வேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். தேர்வுக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்ட வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் அலோக் வர்மாவின் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க நியமனக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  டெல்லியில் பிரதமர் மோடியின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டனர். அப்போது சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க நியமனக்குழு முடிவு செய்யப்பட்டது.  எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியது . இருப்பினும் 2:1 என்ற பெரும்பான்மை கணக்கில் அலோக் வர்மா பதவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

இதனையடுத்து அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான நியமனக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் நியமித்தது. தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அலோக் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அலோக் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ இயக்குநர் பொறுப்பை  நாகேஸ்வர ராவ் கவனிப்பார் எனவும் புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்