வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது -பிரதமர் மோடி

வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது என குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2019-01-18 10:40 GMT
குஜராத் மாநிலம் மகாத்மா மந்திர் சந்திப்பில் ஒன்பதாவது குஜராத் உச்சி மாநாடு தொடங்கியது. குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி வரவேற்று பேசினார்.

உஸ்பெகிஸ்தான் மற்றும் ருவாண்டா அதிபர்கள் ஷாவத் மிர்ஜியோவ் மற்றும் பால் ககாமி ஆகிய தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியுடன் இருவரும் அமர்ந்து இருந்தனர். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

'நாட்டின் பிரதமராக நான் பதவியேற்ற பின்னர் ‘சீர்திருத்தம், செயல்பாடு, புத்தாக்கம், மீண்டும் செயல்பாடு’ என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து நமது அரசு நிர்வாகம் செயலாற்றி வருகின்றது.

கடந்த 1991-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் கடந்த நான்காண்டுகளாகத்தான் சராசரியான பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

உலக வங்கியின் அட்டவணைப்படி எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி தற்போது 77-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இதில் இன்னும் திருப்தி இல்லை. அடுத்த ஆண்டுக்குள் முதல் 50 நாடுகள் என்ற இடத்தை இந்தியா எட்டிப்பிடிக்கும் வகையில் நாம் கடினமாக உழைக்க வேண்டும்  என்று எனது குழுவினரை நான் கேட்டு கொண்டேன்’ என கூறினார்.

மாநாட்டில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, தீபக் பரிக், சந்திர சேகரன், உதய் கோடக், கேஎம். பிர்லா, பிகே கோயங்கா உள்பட பல கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்