காஷ்மீருக்கு போக்குவரத்து 3-வது நாளாக துண்டிப்பு

காஷ்மீருக்கு போக்குவரத்து 3-வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-02 20:45 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனுடன் கனமழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. பனிப் பொழிவு காரணமாக சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள்கள் தேங்கி கிடக்கின்றன. இதைப்போல பலத்த மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஸ்ரீநகர்-ஜம்மு இடையிலான 300 கி.மீ. தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு மற்றும் உறைபனி காரணமாக 3-வது நாளாக நேற்றும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பள்ளத்தாக்கு பகுதி நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலையில் ஏற்கனவே நுழைந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதைப்போல 86 கி.மீ. தூரம் கொண்ட முக்கியமான முகல் சாலை, கடந்த மாதம் முதலே மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்