நாடாளுமன்ற குழு ஆய்வில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கைகளை வெளியிட நிதி அமைச்சகம் மறுப்பு

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய அறிக்கைகள் நாடாளுமன்ற குழுவின் ஆய்வில் உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-02-04 10:30 GMT
புதுடெல்லி,

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.

இதுபற்றி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கறுப்பு பணம் பற்றிய 3 அறிக்கைகள் மற்றும் அதற்கான அரசின் பதில் ஆகியவை நாடாளுமன்ற மக்களவையின் செயலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.  இது நிதிக்கான நிலைக்குழு முன் சமர்ப்பிக்கப்படும்.  அதன்பின் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்த அறிக்கையின் நகல்களை பகிர்ந்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், தகவல்களை வெளியிட்டால் அது நாடாளுமன்றத்தின் உரிமையை மீறிய செயலாகும்.  எனவே,  ஆர்.டி.ஐ. பிரிவு 8(1)(சி)யின் கீழ் தகவலை வெளியிடுவது விலக்காகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கைகள் கடந்த 4 வருடங்களுக்கு முன் அரசிடம் அளிக்கப்பட்டு விட்டன.  கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 21ந்தேதி நாடாளுமன்ற குழுவின் முன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

ஆனால் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2005-2014ம் ஆண்டுகளில் ரூ.55 லட்சத்து 20 ஆயிரத்து 515 கோடி கறுப்பு பணம் இந்தியாவிற்குள் வந்துள்ளது.  இதேபோன்று, இந்த காலக்கட்டத்தில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 967 கோடி கறுப்பு பணம் நாட்டை விட்டு வெளியேறி உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்