மாணவர் சங்க நிகழ்ச்சிக்கு சென்றபோது அகிலேஷ் யாதவ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் சர்ச்சை

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மாணவர் சங்க நிகழ்ச்சிக்கு செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-02-12 23:00 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருந்தார். இதற்காக நேற்று அவர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஒரு தனியார் விமானம் மூலம் புறப்பட இருந்தார்.

ஆனால் விமான நிலையத்திலேயே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தன்னை அதிகாரிகள் காரணம் கூறாமலேயே தடுத்து நிறுத்தியதுடன், என்னை பிடித்து இழுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டது குறித்த எந்த உத்தரவையும் அவர்கள் காட்டவில்லை என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

அதிகாரிகள் அந்த குற்றச்சாட்டை மறுத்தனர். ‘அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை அவ்வளவு தான்’ என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் கூடியிருந்த சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனால் விமான பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையில், “சமாஜ்வாடி கட்சி தனது அராஜக நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அலகாபாத் பல்கலைக்கழகம், மாணவர் அமைப்புகள் இடையே பிரச்சினைகள் இருப்பதால் அகிலேஷ் யாதவின் வருகை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. எனவே தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது” என்று கூறப்பட்டுள்ளது.

அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் திங்கட்கிழமை எழுதிய கடிதத்தையும் அரசு வெளியிட்டது. அதில், பல்கலைக்கழகத்தின் எந்த விழாக்களிலும் எந்த அரசியல் தலைவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்-மந்திரியின் கருத்து பற்றி அகிலேஷ் கூறும்போது, “இதில் உண்மையான பிரச்சினை இருக்குமானால், போலீசார் தெரிவித்திருக்க வேண்டும் அல்லது எனது பயணத்தை மாற்றும்படி கூறியிருக்கலாம். மக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை பற்றி நான் அறிவேன். ஆனால் நான் பேசுவதையும், கேள்வி கேட்பதையும் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இதனை செய்துள்ளனர்” என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்த சம்பவத்துக்கு டுவிட்டர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “மத்தியிலும், உத்தரபிரதேசத்திலும் உள்ள பா.ஜனதா அரசு பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணியை பார்த்து பயப்படுகிறது. அதனால் தான் எங்கள் அரசியல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அனைத்து மட்டங்களிலும் இதனை எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை மாநில சட்டமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள், இது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை போல உள்ளது என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்