மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

புல்வமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மாபெரும் தவறை செய்து விட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2019-02-15 06:07 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புல்வமா தாக்குதல் குறித்து இன்று மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்வீடனில் இருந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசரமாக நாடு திரும்பினார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார். பிரதமர் மோடி பேசியதாவது:- “ பல கனவுகளோடு இருந்த, தாக்குதலில் வீரமரணம் அடைந்த எமது வீரர்களின் கனவுகளை கலைய விட மாட்டோம்.  தீவிரவாதிகளே நீங்கள் பெரிய தவறு இழைத்து விட்டீர்கள்; அதற்கான பெரிய விலையை நீங்கள் திருப்பிக் கொடுக்கச் செய்வோம். 

புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ; உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். 

இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. இந்தியாவை சீர்குலைக்க முடியும் என்று அண்டை நாடு கருதினால், அதை அந்த நாடு மறந்துவிட வேண்டும். ஒருபோதும் அது நடக்காது” என்றார். 

மேலும் செய்திகள்