“வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும்” - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ராகுல்காந்தி கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும் என்றும் அவர் கூறினார்.

Update: 2019-02-16 00:00 GMT
புதுடெல்லி,

ராகுல் காந்தி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் பலியானார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு பயங்கரமான துயரம். இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் இந்தியாவின் மிக முக்கியமான நபர்களான வீரர்கள், பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படுவது முழுமையாக வெறுக்கத்தக்கது. பயங்கரவாதத்தின் நோக்கம் நாட்டை பிரிப்பது. நாங்கள் ஒரு வினாடி கூட பிரிந்து இருக்க முடியாது.

எவ்வளவு கடினப்பட்டு முயற்சித்தாலும் அதுபற்றி பிரச்சினை இல்லை. இந்த நாடும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கிறது. நாங்கள் நமது வீரர்களுக்கும், நமது அரசுக்கும் ஆதரவாக நிற்கிறோம். நாம் மிகவும் அன்பு செலுத்திய மக்கள் கொல்லப்பட்டு இருக்கும் உண்மையை தவிர வேறு எந்த பிரச்சினைகள் பற்றியும் பேச விரும்பவில்லை.

அவர்களது குடும்பத்தினருக்கு நாங்கள் தேவை, நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கிறோம். அன்பு மற்றும் பாசத்தால் கட்டப்பட்டுள்ள எங்கள் நாட்டை எந்த படையாலும், எந்த அளவு வெறுப்பு உணர்வாலும், எந்த கோபத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. இது இரங்கல் தெரிவிக்கும் நேரம், வருத்தத்தை தெரிவிக்கும் நேரம், மரியாதை அளிக்கும் நேரம். இதுதவிர வேறு எது பற்றியும் ஒருசில நாட்களுக்கு நான் பேசப்போவதில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மன்மோகன்சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும்போது, “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்பதை தெரியப்படுத்துவதே நமது முக்கிய கடமை. நாங்கள் ஒருபோதும் பயங்கரவாத அமைப்புகளுடன் சமரசம் செய்துகொள்ள முடியாது. நாங்கள் ஓரணியில் நின்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கு பணியாற்ற வேண்டும்” என்றார்.

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் இந்த தாக்குதல் காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொண்டர்களும் எந்த விழாவுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனமும், வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறும்போது, “இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக நாடே ஒன்றாக இணைந்துள்ளது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்