காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: 6 பிரிவினைவாத தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து 6 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு விட்டது.

Update: 2019-02-17 22:45 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.

இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 15-ந் தேதி காஷ்மீர் விரைந்தார். அங்கு பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்த அவர், பாகிஸ்தானிடம் இருந்தும், ஐ.எஸ்.ஐ. அமைப்பிடம் இருந்தும் பணம் பெறுகிறவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாகிஸ்தானிடம் இருந்தும், ஐ.எஸ்.ஐ. அமைப்பிடம் இருந்தும் காஷ்மீர் பிரிவினைவாதிகள்தான் நிதி பெற்றுவந்தனர். எனவே அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே 6 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டது.

அவர்கள் மிர்வாயிஸ் உமர் பாரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி, பாசல் ஹக் குரேஷி, சபீர் ஷா ஆவார்கள்.

இவர்களது உயிருக்கு சில பயங்கரவாத குழுக்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் மாநில அரசு கலந்து பேசி தற்காலிக பாதுகாப்பு வழங்கி வந்தது.

இப்போது இவர்களுக்கான பாதுகாப்பை திரும்ப பெற்றிருப்பது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “ பிரிவினைவாதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பும் மற்றும் வாகனங்களும் திரும்பப் பெறப்படுகின்றன. அவர்களுக்கு இனி எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு அளிக்காது. அரசிடம் இருந்து அவர்கள் வேறு ஏதேனும் வசதிகள் பெற்று வந்திருந்தாலும், அவையும் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டு விடும்” என கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி காஷ்மீர் அதிகாரிகள் கூறும்போது, “வேறு எந்த பிரிவினைவாதிகளும் பாதுகாப்பு அல்லது பிற வசதிகளை பெற்று வந்தால், அதையும் போலீசார் ஆய்வு செய்து உடனே திரும்பப்பெறுவார்கள்” என்று குறிப்பிட்டனர்.

பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசீன் மாலிக் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்