புல்வாமா தாக்குதல் விசாரணை: என்.ஐ.ஏ. வசம் வந்தது

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. இன்று ஏற்றுக் கொண்டது.

Update: 2019-02-20 17:11 GMT
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

தாக்குதல் நடந்த அன்றே காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த உயர் அதிகாரிகளும், தடயவியல் வல்லுனர்களும் அங்கு விரைந்து சென்று தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் அளவு மற்றும் வீரியம் தொடர்பான தடயங்களை சேகரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குறிப்புகளை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணையை இன்று ஏற்றுக் கொண்டது. தாக்குதல் நடந்து 5 நாட்களுக்கு பிறகு என்.ஐ.ஏ வசம் விசாரணை வந்துள்ளது. டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ.  நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்