உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து; 13 பேர் சாவு - 3 வீடுகளும் தரைமட்டமான பரிதாபம்

உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.

Update: 2019-02-23 22:15 GMT
பதோகி,

உத்தரபிரதேசத்தின் பதோகி மாவட்டத்துக்கு உட்பட்ட ரோத்தா பஜாரில் கலியார் மன்சூரி என்பவர் பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த கடைக்கு பின்புறம், மன்சூரியின் மகன் தரைவிரிப்பு தயாரிக்கும் கம்பெனி ஒன்றையும் நடத்தி வந்தார்.

கலியார் மன்சூரியின் கடையில் நேற்று காலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கடை முற்றிலும் இடிந்து தரைமட்டமானதுடன், அருகில் இருந்த 3 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த வெடிவிபத்தில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

வெடிவிபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அங்கு கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. எனவே ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த வெடிவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும் கடை நடத்தி வந்த மன்சூரி, தனது கடையில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்ததாகவும், அதுவே இந்த விபத்துக்கு காரணம் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்