பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா தாக்குதல் - முன்னாள் ராணுவ தலைவர் வி.கே.சிங் கருத்து

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால், இந்தியா தாக்குதல் நடத்தியதாக முன்னாள் ராணுவ தலைவர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-26 18:20 GMT
புதுடெல்லி,

காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது.  பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை வீசியது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் வான் தாக்குதல் குறித்து முன்னாள் ராணுவ தலைவரும், மத்திய மந்திரியுமான வி.கே.சிங் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் இந்தியா தரப்பில் இருந்து அந்த சக்திகள் மீது ஏதாவது செய்ய வேண்டியதாகிவிட்டது. அதனால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்துமா? என்று கேட்டதற்கு, ‘‘இதுகுறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அப்படி ஏதாவது அவர்கள் செய்ய நினைத்தால், கவனத்துடன் தீவிரமாக ஆலோசித்த பின்னரே செய்ய வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்