பாலகோட் பயிற்சி முகாமில் தூங்கிக்கொண்டிருந்த 350 பயங்கரவாதிகள் பலி : இந்திய விமானப்படை அதிரடியில் வீழ்ந்தனர்

பாலகோட் பயிற்சி முகாமில் தூங்கிக் கொண்டிருந்த 350 பயங்கரவாதிகள் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

Update: 2019-02-26 23:47 GMT

புதுடெல்லி, 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாகவும், அடுத்த தாக்குதலை நடத்த முடியாதபடிக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் சென்று பல இடங்களில் அதிரடியாக லேசர் வழிகாட்டும் குண்டுகளை வீசின.

இந்த தாக்குதலின் முக்கிய இலக்கு, கைபர் பக்துங்வா மாகாணத்தின், குன்ஹர் நதிக்கரையில் அமைந்துள்ள பாலகோட் ஆகும்.

இந்த பாலகோட், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 80 கி.மீ. தொலைவில், அப்போட்டாபாத் அருகே அமைந்துள்ளது. இந்த அப்போட்டாபாத், அமெரிக்க தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த இடம் ஆகும்.

பாலகோட் பயிற்சி முகாம்தான், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் ஆகும். மலைப்பாங்கான காட்டில் அமைந்திருந்த இந்த முகாமுக்கு முக்கிய பயங்கரவாதிகளையும், பயிற்சியாளர்களையும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் மாற்றி இருப்பதாக உளவுத்தகவல்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.

இந்த பாலகோட் பயிற்சி முகாம், 5 நட்சத்திர அந்தஸ்தை கொண்டதாகும். பயங்கரவாதிகளுக்கு என்று தனியாக நீச்சல்குளம், அசைவ உணவுகள் சமைத்து பரிமாற சமையல்காரர்கள், சலவையாளர்கள் என பல வசதி கொண்டதாகும்.

இங்கு ஒரே நேரத்தில் 500 முதல் 700 பயங்கரவாதிகள் வரை பயிற்சி பெறத்தக்க சிறப்பு வசதிகள் உள்ளன.

அதிகாலை நேரத்தில் அந்த பயிற்சி முகாமில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை நிரந்தரமாய் தூங்க வைக்கிற வகையில் அதிரடியாய் தாக்குதல் நடத்த இந்தியா முடிவு எடுத்தது.

அதன்படி இந்தியாவின் மிராஜ் ரக போர் விமானங்களும், பிற விமானங்களும் மேற்கு மற்றும் மத்திய கட்டளை மையங்களின் சார்பில் பல்வேறு விமானப்படை தளங்களில் இருந்து நேற்று அதிகாலையில் ஒரே நேரத்தில் கூட்டமாய் புறப்பட்டு சென்றன. இவை எங்கே போகின்றன என்று தெரியாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் விழி பிதுங்கி நின்றனர்; குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அந்த விமானங்களில் ஒரு குழு, கூட்டத்தில் இருந்து பிரிந்து பாலகோட் சென்று லேசர்வழிகாட்டும் குண்டுகளை மழையாய் பொழிந்து, அங்கிருந்த பயிற்சி முகாம்களை தகர்த்தன.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருந்த போதிலும், அந்த முகாம்களில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த சுமார் 325 பேர் பயிற்சியாளர்கள் 25 முதல் 27 பேர் என மொத்தம் சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர். நிரந்தர உறக்கத்துக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்த பயிற்சி முகாமில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்களும், படைத்தளபதிகளும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

இந்த பயிற்சி முகாம், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்