“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மிகவும் அவசியம்” - பா.ஜனதா தலைவர்கள் உறுதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மிகவும் அவசியம் என்று பா.ஜனதா தலைவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-08 22:00 GMT
புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையை சமரச குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுப்பிய நிலையில், இதுபற்றி பா.ஜனதா தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய மந்திரி உமா பாரதி கூறுகையில், “கோர்ட்டு உத்தரவை எல்லோரும் மதிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நான் ஆதரிக்கிறேன். மசூதியை சற்று தொலைவில் கட்டிக் கொள்ளலாம்” என்றார்.

மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறுகையில், கோர்ட்டு உத்தரவை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். அயோத்தியில் ராமரை வழிபடும் உரிமை கூட இந்துக்களுக்கு இல்லையா?” என்றார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் கூறியதாவது:-

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம். அதை விட ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவது மிகவும் முக்கியமானது, அவசியமானது. இந்த விவகாரத்தை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவரும், இவ்வழக்கின் மனுதாரருமான சுப்பிரமணிய சாமி, “கோர்ட்டு உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால், ராமர் கோவில் கட்டுவது, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது. கோவிலை கட்டாமல் விடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இது, அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை” என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்