மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுக்கும் என தகவல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-03-16 07:40 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்து வருகிறது. கடந்த மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த கார் குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் சேர்ந்து பிரான்ஸ் நாடும் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இதுகுறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரி சீனா முட்டுக்கட்டை போட்டது.  இதனால், இந்த தீர்மானத்தை முன்மொழிந்த பிரான்சு உட்பட அமெரிக்கா போன்ற நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மசூத் அசாரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான பணிகளில் தொடர்ந்து இந்தியா ஈடுபடும் என அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா பொறுமையை கடைப்பிடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக சீனாவுக்கும் உள்ளது. பாகிஸ்தானில் பல பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதை அவர்கள் (சீனா) அறிவார்கள்” என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. 

இதற்கிடையே, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி  பட்டியலில் இணைப்பதற்காக சீனாவுடன் அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. மசூத் அசாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி வெற்றி பெறாவிட்டால், மூன்று நாடுகளும் ஐநாவின் சக்தி வாய்ந்த பிரிவுக்கு இவ்விவகாரத்தை அனுப்புவதோடு, இந்த விவகாரத்தில் வெளிப்படையான விவாதத்தை முன்னெடுக்கவும்  திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்