3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு: மார்ச் 28-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் வியாழக்கிழமை விசாரிக்கிறது.

Update: 2019-03-25 05:53 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
 
தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. திமுகவின் கோரிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்