‘திரவுபதியை உங்கள் கண்முன் துகிலுரித்துள்ளனர்’ - முலாயம்சிங் யாதவுக்கு தகவல் அனுப்பிய சுஷ்மா சுவராஜ்

ஜெயப்பிரதாவை விமர்சித்த அசம்கான் தொடர்பாக, முலாயம்சிங் யாதவுக்கு சுஷ்மா சுவராஜ் தகவல் அனுப்பியுள்ளார்.

Update: 2019-04-15 22:30 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் 2 முறை சமாஜ்வாடி எம்.பி.யாக இருந்த நடிகை ஜெயப்பிரதா கடந்த மாதம் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் ராம்பூர் தொகுதியில் மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஜெயப்பிரதாவை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம்கான் பேசும்போது, 10 வருடம் இங்கு பிரதிநிதியாக இருந்தவரை புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 17 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனால் எனக்கு 17 நாட்களில் அவர் அணிந்துள்ள உள்ளாடை காக்கி நிறம் என்பது தெரிந்துவிட்டது என்றார்.

அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி மகாபாரத சம்பவத்தை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமூக வலைத்தளத்தில், “முலாயம் சிங் அவர்களே, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான உங்கள் கண் முன்னே ராம்பூரின் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்மர் அமைதியாக இருந்ததைப்போன்ற தவறை நீங்களும் செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். இந்த தகவலை அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் ஆகியோருக்கும் இணைத்துள்ளார்.

மேலும் செய்திகள்