பெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்: பாபர் மசூதி இடிப்பு பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டதால் நடவடிக்கை

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதால் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2019-04-21 22:38 GMT
போபால்,

மராட்டிய மாநிலத்தில் 2008-ம் ஆண்டு, பெரும் பரபரப்பு ஏற்படுத்திய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர்.

இவர், மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில், முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங்கை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இவர், டி.வி. சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்தார். அப்போது அவர், “அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும். அங்கிருந்த கட்டுமானத்தை (பாபர் மசூதி) இடித்து தள்ளுவதற்கு நான் சென்றிருந்தேன். அந்த கட்டுமானத்தை இடித்து தள்ளுவதற்காக அதன் உச்சியில் நான் ஏறினேன். அதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாட்டின் மீதான கறையை நீக்குவதற்கான பலத்தை கடவுள் எனக்கு தந்தார்” என குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்து, தேர்தல் நடத்தையை மீறிய செயலாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இது நடத்தை விதிகளின் 4-ம் அத்தியாயத்தை மீறிய செயல் என்று கூறி தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்குமாறு கேட்டு பிரக்யா சிங்குக்கு நேற்று முன்தினம் இரவு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு அவர் ஒரு நாளில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சுதம் கடே நேற்று தெரிவித்தார். இருப்பினும் தான் கூறிய கருத்தை பிரக்யா சிங் மறுக்கவில்லை. “நான் சொன்னது சொன்னதுதான். தேர்தல் கமிஷனின் நோட்டீசுக்கு சட்டப்படி நான் பதில் அளிப்பேன்” என கூறினார்.

மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை எதிர்த்து போரிட்டபோது, மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்டார்.

“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவர் என்ற நிலையில் ஹேமந்த் கர்காரே என்னிடம் விசாரணை நடத்தியபோது சித்ரவதை செய்தார். அதற்காக நான் அவரை சபித்ததால்தான் அவர் மும்பை தாக்குதலின்போது கொல்லப்பட்டார்” என கடந்த வியாழக்கிழமை கட்சித்தொண்டர்கள் மத்தியில் பேசியபோது பிரக்யா சிங் தாக்குர் கூறினார்.

இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் கமிஷன் பிரக்யா சிங்குக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்