பானி புயல் 30-ம் தேதி மாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

பானி புயல் 30-ம் தேதி மாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-04-27 05:15 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. இந்நிலையில் வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

இது அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும். இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரக் கூடும். ஏப்ரல்-30 ம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை பானி புயல் நெருங்கும். 

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்கிழக்கே 1210 கி.மீட்டரில் நிலை கொண்டுள்ளது.  ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்யக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்