இலங்கை தாக்குதல் பயங்கரவாதி தமிழகம், கேரளாவில் தொடர்பில் இருந்ததாக தகவல்

இலங்கை தாக்குதல் பயங்கரவாதி ஜக்ரான் ஹாசிம் தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #SriLankaBlasts #TamilNadu #Kerala #NIA

Update: 2019-04-30 08:21 GMT
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஐ.எஸ். ஆதரவு போக்காளர்களின் 'கால் டீடெய்ல் ரெக்கார்டர்' (சிடிஆர்) எனப்படும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் ஜக்ரான் ஹாசிமுடன் தொடர்பை காட்டுகிறது என பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஹாசிம் கடந்த வருடம் இறுதியில் மூன்று மாதங்கள் இந்தியாவில் தங்கியுள்ளார்.

இந்த காலகட்டங்களிலும், அதற்கு பின்னர் அவர் இலங்கை சென்ற பின்னருமான சிடிஆர் பதிவுகளே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது நடத்தப்பட்ட கொடூரமான தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஜக்ரான் ஹாசிம். கேரளாவில் ஞாயிறு அன்று தேசிய புலனாய்வு பிரிவினர், ஐ.எஸ். ஆதரவு கடும் போக்காளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மூவரின் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியது.

சோதனை தொடர்பாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடைபெற்ற வீடுகளில் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், பென்-டிரைவ்கள், மலையாள மொழியிலும், அரபி மொழியிலும் எழுதப்பட்ட டைரிகள், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் உரைகள் அடங்கிய புத்தகங்கள்-டிவிடிக்கள், பெயரிடப்படாத சி.டி.க்கள், இஸ்லாமிய எழுத்தாளர் சையது குதுப்பின் நூல்கள், மதப் பிரசார உரைகள் அடங்கிய சி.டி.க்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மின்னணு ஆவணங்கள், தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாலக்காட்டில் ரியாஸ் என்ற இளைஞர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது கேரளாவில் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டதும், இதற்காக கேரளாவில் இருந்து சென்று பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும் ரியாஸ் ஒப்புக்கொண்டார் என தெரியவந்துள்ளது. இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக இலங்கையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கோவைக்கு வந்து சென்றுள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாகவும் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்கிறது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் கடும் போக்காளர்களை தேசிய புலனாய்வு பிரிவு கண்காணிக்கிறது.

மேலும் செய்திகள்