தேர்தல் அறிக்கை தயாரிக்க அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்திய பா.ஜனதா - தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார்

தேர்தல் அறிக்கை தயாரிக்க அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக, பா.ஜனதா கட்சியின் மீது தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

Update: 2019-05-10 22:51 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி நேற்று குற்றம் சாட்டியது. நாடாளுமன்ற தேர்தல் அறிவித்து 2 வாரம் கடந்த நிலையில், அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்களை கேட்டு ஒவ்வொரு துறை தலைவர்களுக்கும் மத்திய வர்த்தக அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கடிதம் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி நேற்று காலையில் புகார் கூறினார்.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக இந்த தகவல்கள் கேட்கப்பட்டதாக கூறிய சிங்வி, அதன்படி பல்வேறு துறை தலைவர்களும் இ-மெயில் மூலம் மேற்படி தகவல்களை வழங்கியதாகவும் தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு அரசியல் கட்சியோ, தலைவரோ இந்த செயலில் ஈடுபடுவது நடத்தை விதிமீறல் ஆகும் எனவும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் சிங்வி தலைமையில் தேர்தல் கமி‌ஷனில் புகார் மனு ஒன்றை அளித்தனர். இதைப்போல பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து நடத்தை விதிமீறலில் ஈடுபடுவதாகவும் அந்த மனுவில் காங்கிரசார் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்