”இவிஎம் குறித்து தேவையற்ற சர்ச்சைகள் எழுகின்றன” கவலையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி

இவிஎம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை அரசியல் கட்சிகள் எழுப்புவதாக பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தியதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Update: 2019-05-22 06:01 GMT
புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பதவி ஏற்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்துமுடிந்து, நாளை (வியாழக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான 14 கருத்துக்கணிப்புகளில் 12, இந்த கூட்டணிக்கு 282 இடங்கள் முதல் 365 இடங்கள் வரை முழு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு தங்கள் சேவையை வழங்கிய மத்திய மந்திரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில், இவிஎம் இயந்திரங்கள் குறித்து தேவையற்ற சர்ச்சைகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுகின்றன என தனது கவலையை பிரதமர் மோடி வெளிப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 36 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், ஆளும் கூட்டணி ஆட்சி தனது பலத்தை காட்டும் வகையில், இந்த கூட்டத்தை நடத்தியதாகவும்  அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்