மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல்; தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

மேற்கு வங்காள மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளியின் குடும்பத்தினர் தாக்குதலில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 3வது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-06-13 07:16 GMT
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்து உள்ளது.  இங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஷாகித் (வயது 77) என்பவர் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்.  இதற்கு மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என கூறி அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில், பரிபாஹா முகோபாத்யா என்ற மருத்துவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடருகிறது.  அவர்கள் இந்த விவகாரத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  ஆனால், போராட்டத்தினை விட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி அரசு கூறி வருகிறது.

இதுபற்றி இளநிலை மருத்துவர் ஒருவர், நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர கூடாது.

எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.  போலீசாரும் எங்களது புகார்களை கண்டுகொள்ளவில்லை.  இந்த சூழலுக்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும்.  இதற்கு முதல் அமைச்சர் உறுதி தரவேண்டும்.  அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.  எங்களது கோரிக்கைகளை போஸ்டர்களின் வழியே நாங்கள் விளக்கி விட்டோம் என கூறினார்.

மேலும் செய்திகள்