மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக சுமன்ராவ் தேர்வு

மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2019-06-16 22:55 GMT
மும்பை,

மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு அரங்கில் 2019-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.

இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டு போட்டிக்கு மெருகேற்றினர். இதில் நடுவர்களாக இந்தி பட உலகின் நடன இயக்குனர் ரெமோ டி சூசா, நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிங், ஆடை வடிவமைப்பு கலைஞர் பால்குனி ஷானே பிகாக்கா, இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் இந்திய அழகியான சென்னை அழகி அனுகீர்த்தி வாஸ் கிரீடம் சூட்டினார். அப்போது மொத்த அரங்கமும் கரவொலி எழுப்பியது.

சத்தீஷ்காரை சேர்ந்த ஷிவானி ஜாதவ் ‘மிஸ் கிராண்ட்’ இந்தியா பட்டத்தையும், பீகாரின் ஸ்ரேயா சங்கர் ‘மிஸ் இந்தியா யுனைட்டெட் காண்டினன்ட்ஸ்’ பட்டத்தையும் பெற்றனர்.

சுமன்ராவ், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி, தாய்லாந்து நாட்டின் பட்டயா நகரில் நடக்க உள்ள ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்.

சுமன்ராவ் பிறந்தது ராஜஸ்தான் என்றாலும் தன் வாழ்வின் பெரும்பகுதியை மும்பையில் கழித்துள்ளார். தற்போது டெல்லி கல்லூரியில் பி.காம். பட்ட படிப்புடன், ஆடிட்டர் பயிற்சியும் பெற்று வருகிறார். மாடல் அழகியாகவும் உள்ளார். கதக் நடனத்திலும் ஆர்வம் கொண்டுள்ளார்.

இந்திய அழகி போட்டியின்போது, நடிகைகள் கத்ரினா கைப், நடிகர் விக்கி கவுஷால், நடிகை மவுனி ராய் உள்ளிட்டோரின் நடனம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.

மேலும் செய்திகள்