யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்

யோகா, அனைத்துக்கும் மேலானது என்றும், அதை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-06-22 00:00 GMT
ராஞ்சி,

உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப்பெரும் கொடைகளில் யோகாவும் ஒன்று. இந்த யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் யோகா தினம் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்தார்.

மோடியின் இந்த பரிந்துரையை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. அறிவித்து உள்ளது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 5-வது யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி நாடு முழுவதும் சிறப்பு யோகா பயிற்சிகள் நடந்தன. இதன் பிரதான நிகழ்ச்சி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது. அங்குள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். அவர் பல்வேறு ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை செய்தார்.

இதில் பள்ளி மாணவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் ஆர்வலர்கள் பங்கேற்று பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் கூட இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதில் யோகா பயிற்சிகள் முக்கிய பங்காற்ற முடியும். எனவே இந்த ஆண்டின் கருப்பொருள், ‘இதயத்துக்கான யோகா’ என்பது ஆகும்.

யோகா நிலையானது. நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் சாரம்சமான ஆரோக்கியமான உடல், நிலையான மனநிலை மற்றும் ஒன்றுபட்ட சக்தி போன்றவை அப்படியே இருக்கின்றன. அறிவு, கர்மா மற்றும் பக்தி ஆகியவற்றின் சரியான கலவையை யோகா அளிக்கிறது.

மதம், சாதி, இனம், வண்ணம் மற்றும் பிராந்தியம் என அனைத்துக்கும் மேலானது யோகா. எனவே மக்கள் அனைவரும் யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொண்டிருக்க வேண்டும். யோகாவை நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும், பழங்குடி பகுதிகளுக்கும் எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும்.

யோகாவை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், யோகா தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் மூலம், செல்போனை நவீன சாப்ட்வேர்களால் மேம்படுத்துவது போல யோகாவையும் மேம்படுத்த முடியும். அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய யோகா பயிற்சிகளை உலக மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தார். செங்கோட்டையில் நடந்த யோகா நிகழ்ச்சிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடத்தினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வெள்ளை சீருடையில் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சிகளை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்தினார். இதில் எம்.பி.க்கள் நாடாளுமன்ற ஊழியர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தனர். டெல்லி ராஜபாதையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நாக்பூரில் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் யோகா பயிற்சிகளை நடத்தினர்.

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருடன் யோகா பயிற்சிகளை செய்த உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தியாவின் பழங்கால வரலாறு மற்றும் வேற்றுமையின் சின்னமாக யோகா திகழ்வதாகவும், இது உலகுக்கு ஆரோக்கிய வாழ்வை காட்டியுள்ளது என்றும் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்தார்.

வெளியுறவு அமைச்சகத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சிகளை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையேற்று நடத்தினார். இதில் தூதரக அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். உத்தரபிரதேச கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சிகளில் கவர்னர் ராம் நாயக், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவை தவிர பல்வேறு உலக நாடுகளிலும் சர்வதேச யோகா தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி ஐ.நா. பொதுச்சபை அரங்கில் பல்வேறு நாட்டு தூதர்கள் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் இணைந்து யோகா பயிற்சிகளை செய்தனர். இதை ஐ.நா. துணை செயலாளர் அமினா முகமது தலைமையேற்று நடத்தினார்.

சீன தலைநகர் பீஜிங்கில் இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் ஏராளமானோர் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இதைப்போல இஸ்ரேலின் டெல் அவிவ் உள்பட பல்வேறு உலக நகரங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக அரங்கேறின.

மேலும் செய்திகள்