கொல்கத்தாவில் மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா தொண்டர்கள் 2 பேர் காயம் - திரிணாமுல் காங்கிரஸ், போலீஸ் மறுப்பு

கொல்கத்தாவில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா தொண்டர்கள் 2 பேர் காயம் அடைந்ததாக கூறப்பட்ட சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

Update: 2019-06-23 21:07 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மாலை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ஒரு கூட்டம் முடிந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது 2 பா.ஜனதா தொண்டர்களும், 14 வயது சிறுவன் ஒருவனும் அவர்களை பார்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோ‌ஷமிட்டதால் இருதரப்பினருக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அந்த 3 பேரும் குண்டு காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பா.ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.

ஆனால் போலீசார், எங்கள் மீது கற்களை வீசியவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தோம் என்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தால் காலி தோட்டா சிதறல்கள் அங்கு இருந்திருக்கும் என்றனர். இதற்கிடையே வன்முறைக்கு காரணமான பா.ஜனதா உள்ளூர் தலைவர் தமால் காந்தி என்பவரை கைது செய்தனர். இதனை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்