பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது: காங்கிரஸ் கட்சி

பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர் என்பதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Update: 2019-06-24 11:59 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசினார்.  அதனால் அவை தலைவர் அவரது சில பேச்சுகளை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

சவுத்ரி பேசும்பொழுது, பிரதமர் மிக பெரிய வர்த்தகர்.  எங்களது தயாரிப்புகளை சந்தையில் விற்க எங்களால் (காங்கிரஸ் கட்சியால்) முடியவில்லை.  அதனால் நாங்கள் தோற்றோம் (மக்களவை தேர்தலில்) என கூறினார்.

இந்த விவாதத்தினை தொடங்கி வைத்து பேசிய மத்திய மந்திரி சாரங்கியையும் விமர்சித்து சவுத்ரி பேசினார்.  சாரங்கி வரம்பு மீறி பிரதமரை புகழ்கிறார் என சவுத்ரி கூறியதற்கு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா என அக்கட்சி தலைவர்கள் கூறினர் என அவருக்கு பதிலடி தரப்பட்டது.

தொடர்ந்து பேசிய சவுத்ரி, நாடு வறட்சியில் சிக்கி தவிக்கிறது.  ஆனால் அதுபற்றி அரசு கவலை கொள்ளவில்லை.  பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களின் துயரங்களை போக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை.  மோடியை புகழ்வது போதும் என்றும் அவரே அனைத்து விசயங்களையும் செய்வார் என்றும் நினைக்கின்றனர் என கூறினார்.

மேலும் செய்திகள்