பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் -பிரதமர் மோடி

பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-07-06 08:14 GMT
வாரணாசி,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் மோடி பிரதமரானார்.

இந்நிலையில், பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்ட தொடக்கத்திற்காக வாரணாசி தொகுதிக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை வாரணாசி விமான நிலையத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில தலைவர் எம்.என். பாண்டே  ஆகியோர் வரவேற்றனர்.

வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலை திறப்பும் நடைபெறுகிறது. இதற்காக வருகை தந்த சாஸ்திரியின் மகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனில் சாஸ்திரி பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து  வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாஸ்திரியின் இளைய மகன் மற்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுனில் சாஸ்திரியும் கலந்து கொண்டார்.

இதன்பின் மரம் நடு விழாவையும் பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

தண்ணீர் கிடைப்பதை விட, தண்ணீரை வீணாக்குவதும் கவனக்குறைவாகப் பயன்படுத்துவதும் பெரிய பிரச்சினைகள். எனவே  வீடுகளில் அல்லது நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டாலும், தண்ணீரை வீணாக்குவதை நிறுத்த வேண்டும்.

பட்ஜெட்டில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய நாங்கள் வழிகாட்டியுள்ளோம். அது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வரவிருக்கும் 10 வருடங்கள் என்ற தொலைநோக்குடன் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்.

5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்கை நாங்கள் அடைவோம் என்று நான் நம்புகிறேன், ஆனால் சிலர் இதன் தேவை என்ன என்று கேட்கிறார்கள், அது ஏன் செய்யப்படுகிறது? என கேட்கிறார்கள். இவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்