மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் விரக்தி - 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

தெலுங்கானாவில் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் ஏற்பட்ட விரக்தியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2026-01-08 21:35 IST

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம் மரிகல் மண்டலம் தீலேர் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமுலு (32 வயது). இவருக்கும் சுஜாதா (28 வயது) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரித்திகா (8 வயது) என்ற மகளும், சைதன்யா (6 வயது) என்ற மகனும் இருந்தனர்.

திருமணமானது முதலே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தம்பதி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். குழந்தைகள் இருவரும் தந்தை சிவராமுலு பரமாரிப்பில் இருந்து வந்தனர். இதனால் மனமுடைந்து வாழ்ந்து வந்த சிவராமுலு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சிவராமுலு 2 குழந்தைகளையும் விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அமைக்கப்பட்ட குடிசையில் குழந்தைகளை தூங்க வைத்துள்ளார். பின்னர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குழந்தைகள் இருவரையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டார். தொடர்ந்து அங்குள்ள ஏரியில் குழந்தைகளின் உடல்களை வீசியுள்ளார். பின்னர் அவர், தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்ததுடன் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயணைப்பு மீட்பு படையினரின் உதவியுடன் ஏரியில் மூழ்கி கிடந்த 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்