எஸ்.ஐ.ஆர். பணியில் 72 பேர் பலி; பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி: மம்தா பானர்ஜி ஆவேசம்
எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என மம்தா பானர்ஜி கூறினார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதனுடன் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் மற்றம் சேர்ப்பு பணிகள் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். பணிகள் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பல பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு கூட அவர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
பெண் வாக்காளர்களின் பெயர்கள் ஏன் அதிக அளவில் நீக்கப்பட்டன? ஏன் இளைஞர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன? என கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் வாக்களிக்க அனுமதி இல்லை என குறையாக கூறினார். வாக்காளர் பட்டியலில் இருந்து 54 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? என கேள்வி கேட்ட அவர், பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி என ஆவேசத்துடன் கூறினார்.