மோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்

மோடி அரசின் 50 நாள் செயல்பாடுகள், சாதனைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Update: 2019-07-22 23:30 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி, 2-வது முறையாக, கடந்த மே 30-ந் தேதி பிரதமர் பதவி ஏற்றார். அவரது அரசு பதவிக்கு வந்து 50 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, 50 நாள் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிக்கையை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 50 நாட்களில் அனைத்துதரப்பு மக்களுக்கும் எண்ணற்ற நற்காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘அனைவருடனும், அனைவருக்காகவும் வளர்ச்சி’ என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி பதவி ஏற்றார். அவரது செயல்பாடுகளை மக்கள் பார்த்துள்ளனர். வேகம், திறமை ஆகியவற்றை பார்த்துள்ளனர்.

இந்தியாவை முன்னெடுத்துச் செல்லுதல், அண்டை நாடுகளுடன் உறவை முன்னெடுத்துச் செல்லுதல், முதலீடு, ஊழலுக்கு எதிரான போர், சமூக நீதி ஆகியவை 50 நாட்களின் முக்கிய சாதனைகள் ஆகும்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 3 மடங்குவரை உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் விவசாய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தால், 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் ஆதிக்கத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுதான், பிரதமர் மோடி எடுத்த முதல் முடிவு. வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம், நடுத்தர வகுப்பினருக்கு வரிச்சலுகை, வீட்டு கடன் வட்டிக்கு சலுகை என சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது கனவல்ல, நிஜமாக கூடியது.

மருத்துவ கல்வியை சீர்திருத்தும் நடவடிக்கைகள், ‘போக்சோ’ சட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருதல் என சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சாலை, ரெயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டம், ‘ஜல் சக்தி’ அமைச்சகம் அமைத்தது ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

வேகமான வளர்ச்சி என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. சீர்திருத்தங்களின் வேகம், மோடியின் முந்தைய அரசின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. எனவே, முன்பை விட இந்த அரசு மிக உறுதியாக செயல்படும் என்ற உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. சந்திரயான்-2, ககன்யான் என விண்வெளி துறையிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மேலும் செய்திகள்