பதவி விலகாவிட்டால் கர்நாடக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு

பதவி விலகாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கர்நாடக பாஜக முடிவு எடுத்துள்ளது.

Update: 2019-07-27 10:39 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 23-ந் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் அவர் தோல்வி அடைந்ததால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு எடுக்காததால், ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று கர்நாடக தலைவர்களுக்கு பாரதீய ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது. இதனால் எடியூரப்பா ஏமாற்றம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நிலையில், பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நேற்று அனுமதி வழங்கியது.

கட்சி மேலிடத்தின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, எடியூரப்பா, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, நேற்று மாலை  6.30 மணிக்கு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

எடியூரப்பா வரும் திங்கள் கிழமை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இப்போதுள்ளநிலையில் அவையில் 209 உறுப்பினர்கள் உள்ளனர். அவையில் 105 உறுப்பினர்கள் இருந்தாலே அதுபெரும்பான்மைதான். எடியூரப்பாவுக்கு ஆதரவாக 105 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 63 எம்எல்ஏக்கள் ஆதரவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது. 

நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சபாநாயகர் ரமேஷ்குமார் தானாக பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை நீக்குவோம் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்