ஈராக்கில் சிக்கி தவித்த பஞ்சாப் தொழிலாளர்கள் 7 பேர் நாடு திரும்பினர்

ஈராக்கில் சிக்கி தவித்த பஞ்சாப் தொழிலாளர்கள் 7 பேர் நாடு திரும்பினர்.

Update: 2019-07-28 20:47 GMT
பக்வாரா,

பஞ்சாப்பின் பக்வாரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 தொழிலாளர்கள் 2 ஏஜெண்டுகளிடம் ஆயிரக்கணக்கான பணத்தை கொடுத்து சில மாதங்களுக்கு முன் ஈராக் நாட்டுக்கு வேலைக்கு சென்றனர். அங்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள உள்ளூர் ஏஜெண்டு இவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக்கொண்டு, வேலை எதுவும் ஏற்பாடு செய்யாமல் ஏமாற்றி விட்டார்.

இதனால் இந்த தொழிலாளர்கள் அனைவரும் ஈராக் அதிகாரிகளுக்கு பயந்து ஒரு அறையில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து தங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 7 தொழிலாளர்களும் நாடு திரும்ப நடவடிக்கை எடுத்தது. இந்த தீவிர நடவடிக்கையின் பலனாக 7 தொழிலாளர்களும் நேற்று தங்கள் சொந்த ஊர் வந்தனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

போலி ஏஜெண்டுகள் மூலம் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் விவகாரத்தை சட்டசபையில் எழுப்பப்போவதாக சிரோமணி அகாலிதளம் எம்.எல்.ஏ. பல்தேவ் சிங் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்