காஷ்மீரில் வளர்ச்சியை தடுக்கும் முயற்சி வெற்றி பெறாது - பிரதமர் மோடி உறுதி

காஷ்மீரில் வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்றும், குண்டுகளை விட வளர்ச்சி அதிக வலிமை வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-07-28 23:30 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாடி வருகிறார். நேற்று அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது:-

காஷ்மீரில் கடந்த மாதம் ‘கிராமத்துக்கு திரும்புவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல்முறையாக, அரசு அதிகாரிகள், எல்லையோர கிராமங்கள் உள்பட அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்றனர். பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தவை உள்பட 4 ஆயிரத்து 500 பஞ்சாயத்துகளுக்கு சென்றனர். அங்குள்ள மக்களை சந்தித்து வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.

அந்த கூட்டங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். காஷ்மீர் மக்கள், வளர்ச்சி என்னும் தேசிய நீரோட்டத்தில் இணைவதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் நல்ல நிர்வாகத்தை விரும்புகிறார்கள்.

துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றின் வலிமையை விட வளர்ச்சியின் வலிமை மிக அதிகமாகும். வளர்ச்சிக்கு செல்லும் பாதையில் வெறுப்புணர்வை பரப்பி, வளர்ச்சிக்கு இடையூறு செய்பவர்கள், வெற்றிபெற மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அமர்நாத் யாத்திரை நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி தொடங்கி, இதுவரை 3 லட்சம் பக்தர்கள், யாத்திரையை நிறைவு செய்துள்ளனர். இது, கடந்த 2015-ம் ஆண்டு யாத்திரை சென்ற பக்தர்கள் எண்ணிக்கையை விட மிக அதிகம். காஷ்மீர் மக்களின் விருந்தோம்பலால், அங்கு சுற்றுலாத்துறை வளரும். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கும் மக்கள் சென்று வருகிறார்கள்.

வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தை மக்கள் விசேஷ ஏற்பாடுகளுடன் கொண்டாட வேண்டும். அதில் பெருமளவு மக்கள் பங்கேற்க வேண்டும்.

புதுமையாக எப்படி கொண்டாடலாம் என்று சிந்திக்க வேண்டும். அதை மக்கள் திருவிழா ஆக்க வேண்டும். வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்