பாஜகவின் இளம் ஊழியர்களுக்கு சுஷ்மா சுவராஜ் மிகச்சிறந்த முன்னுதாரணமாவார்- பிரதமர் மோடி

மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

Update: 2019-08-13 18:46 GMT
புதுடெல்லி,

மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது, “சுஷ்மா சுவராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். தனது தனிப்பட்ட வாழ்விலும் நிறைய சாதித்துள்ள அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருக்கும் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாவார். 

அவர் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற கூற்றை நடைமுறைபடுத்திக் காட்டினார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளை தனது பிரச்சினையாகவே கருதி வந்தார். வெளியுறவு துறை அமைச்சகத்தின் குணாதிசயங்களை அவர் மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த 70 வருடங்களில் நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய 5 ஆண்டு காலத்தில் இன்று நம்மிடம் 505 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் அவரது செயல் திறன் எப்படிப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சுஷ்மா சுவராஜை விட வயதில் மூத்தவனாக இருந்தாலும் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் முதன் முறையாக ஐநாவில் உரையாற்ற இருந்த போது, நான் முன்னதாக எதையும் எழுதி வைக்கவில்லை. அங்கு சென்று நேரடியாக உரையாற்ற இருந்தேன். இதை அறிந்த சுஷ்மா சுவராஜ் எனது முடிவை கடுமையாக எதிர்த்தார். நான் உரையாற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக சுஷ்மா சுவராஜ் மற்றும் எங்கள் குழுவினர் சேர்ந்து ஓர் உரையை தயார் செய்தோம். 

பின்னர் அவர் என்னிடம், “ஒவ்வொரு மன்றத்திற்கும் சில விதிகளும் நடைமுறைகளும் உண்டு. நீங்கள் எவ்வளவு சிறந்த பேச்சாளராக இருந்தாலும் அவற்றை கடைபிடித்தே ஆக வேண்டும்” என்றார். இதுவே நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட முதல் பாடமாகும்.

இந்த தருணத்தில் அவர் நம்மோடு தான் இருக்கிறார். அவர் பின்பற்றிய கொள்கைகளின் வழி நடக்க இறைவன் நமக்கு பலம் தர வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.” இவ்வாறு பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “அரசியலில் அவரது பங்களிப்பை நாம் உயிரோடு இருக்கும் வரை நம்மால் மறக்க முடியாது. அவரது குரல் நாடாளுமன்றத்தில் என்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்” என்றார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

மேலும் செய்திகள்