வீட்டை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவிற்கு நோட்டீஸ்

கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதுகாப்பு கருதி வீட்டை காலி செய்ய ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிற்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2019-08-17 11:12 GMT
ஐதரபாதாத்,

மராட்டியம், கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணா நதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவின் உந்தவள்ளியில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குடியிருக்கும்  வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சந்திரபாபு நாயுடு தற்போது  ஐதராபாத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் தண்ணீர் புகுந்ததால் சேதம் அடைந்த சந்திரபாபு நாயுடுவின் வீட்டை மாநில அரசு ட்ரோன் மூலம் படம்பிடித்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேமராமேன்களை சிறைபிடித்த தெலுங்கு தேசம் கட்சியினர் சிலர் போராட்டமும் நடத்தினர். இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகரின் வீட்டை படம்பிடிக்க யார் அனுமதி கொடுத்தார்கள் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆந்திர மந்திரி அனில் குமார், இந்த இடம் மட்டுமின்றி மாநிலத்தில் வெள்ளம் பாதித்த அனைத்து இடங்களும் ட்ரோன் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் சந்திரபாபு நாயுடுவின் வீடு இடிந்து விழும் சூழல் உருவாகியுள்ளதாலும் வீட்டை முற்றிலுமாக காலி செய்ய  மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்