வீட்டுக்கு மேல் ‘குட்டி’ விமானம் பறந்தது; “எனக்கு எதிரான சதி” சந்திரபாபு நாயுடு

வீட்டுக்கு மேல் ‘குட்டி’ விமானம் பறந்த சம்பவத்தில், தனக்கு எதிரான சதி நடைபெறுவதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

Update: 2019-08-17 21:30 GMT
விஜயவாடா,

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு தடேபள்ளியில், கிருஷ்ணா ஆற்றிற்கு அருகில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டை வேவுபார்ப்பது போல் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்தது. அதைக் கண்டு தெலுங்குதேச கட்சி தொண்டர்களும், அந்த பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு திரண்ட அவர்கள், போலீசாரிடம் இதுகுறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதிகாரத்திற்கு உட்பட்டே அந்த பகுதியை வீடியோ எடுத்ததாக தரையில் இருந்து குட்டி விமானத்தை இயக்கிய இருவர் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரபாபு நாயுடு, மாவட்ட போலீஸ் டி.ஜி.பி. கவுதம் சவாங்கியை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். “உயர்மட்ட பாதுகாப்பு வழங்கிய பின்பும், என் வீட்டிற்கு மேல் ஆளில்லா விமானம் எப்படி பறக்க விடப்பட்டது? இது எனது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. யாருடைய உத்தரவின்படி இது நடந்தது? எனக்கு எதிராக சதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? டி.ஜி.பி.யின் உத்தரவு இல்லாமல் இவ்வாறு நடக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே நீர்ப்பாசனத்துறை மந்திரி அனில்குமார் யாதவ் கூறுகையில், கிருஷ்ணா ஆற்றின் வெள்ளப்பெருக்கு குறித்து ஆய்வு நடத்துவதற்காகவே அங்கு ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டது என்றதுடன் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டையும் மறுத்தார்.

மேலும் செய்திகள்