கர்நாடக மாநில பா.ஜனதாவின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் நியமனம்

கர்நாடக மாநிலத்தின் பா.ஜனதா கட்சியின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-08-20 18:17 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது.  அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ந்தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

இதனைதொடர்ந்து மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அமித்ஷா அனுமதி வழங்கினார். இந்த நிலையில் எடியூரப்பா பதவி ஏற்று 25 நாட்களுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது.

இதன்படி முதல்கட்டமாக 17 பேர் மந்திரிசபையில் சேர்த்து கொள்ளப்பட்டனர். இன்று காலை பெங்களூருவில் கவர்னர் மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில், சி.என். அஸ்வத் நாராயண், கோவிந்த் எம். கர்ஜோல், கே.எஸ். ஈஸ்வரப்பா உள்ளிட்ட 17 மந்திரிகள் பதவியேற்று கொண்டனர்.  மந்திரிகளாக பதவி ஏற்றவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் பா.ஜனதாவின் புதிய தலைவராக நளின் குமார் காடீலை புதிய தலைவராக நியமனம் செய்து அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்று முதல் நளின் குமார் காடீல் கர்நாடக மாநிலத்தின் புதிய பா.ஜனதா தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நளின் குமார் காடீல் கடந்த 2009ம் ஆண்டு முதல் மூன்று முறை கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்சினா என்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்