அருண் ஜெட்லி இறுதி சடங்கின் போது திருடர்கள் கைவரிசை: 11 செல்போன்களை திருடிச்சென்றனர்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 11 பேர் தங்கள் மொபைல் போன்கள் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.

Update: 2019-08-27 02:30 GMT
புதுடெல்லி, 

உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமான அருண் ஜெட்லியின் உடல், முதலில் அவரது வீட்டிலும் பின்னர், பாஜக தலைமை அலுவலகத்திலும் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டது. 

யமுனை நதிக் கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியில், அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற்றன. பின்னர், அவரது மகன் ரோஹன் ஜெட்லி தீ மூட்டினார். டெல்லி அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.   

 அருண் ஜெட்லியின் இறுதி சடங்கில் திரளான மக்களும், கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட, மொபைல் போன் திருடர்கள் 11 பேர்களின் மொபைல் போன்களை திருடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த 11 பேர்களில் பாரதீய ஜனதா எம்.பி. பாபுல் சுப்ரியோ மற்றும் பதஞ்சலியின் செய்தித்தொடர்பாளர் எஸ்.கே.திஜராவாலா ஆகியோர் அடங்குவர்.

இதையடுத்து, திஜாராவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இறுதிச்சடங்கில்,  கலந்து கொண்ட போது, தனது செல்போன் உள்பட  11 பேரின் செல்போன்கள் திருடு போய்விட்டதாக   தெரிவித்துள்ளார்.  இதையடுத்து பாரத ஜனதா எம்.பி. சுப்ரியோவும் தனது தொலைபேசியை திருடப்பட்டதாக கூறியுள்ளார். இந்த டுவிட்டில் டெல்லி போலீசார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் குறித்துள்ளார்.

டிஜாராவாலா, தனது தொலைந்த தொலைபேசியின் தற்போதைய இருப்பிடத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரியோவிடம் இருந்து 5 புகார்கள் வந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்