காஷ்மீரில் உயிரிழப்புகளை தடுக்க கட்டுப்பாடுகள் அவசியம் - கவர்னர் தகவல்

காஷ்மீரில் உயிரிழப்புகளை தடுக்க கட்டுப்பாடுகள் அவசியம் என அம்மாநில கவர்னர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-28 13:36 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது சில இடங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் பரவலாக நடைமுறையில் உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மாநில கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக நிருபர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறுகையில், ‘காஷ்மீரில் உயிரிழப்புகளை தடுப்பதற்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. இணையதள சேவையை சமூக விரோத கும்பல்கள் எளிதாக பயன்படுத்துவதால், இணையதள சேவை மேலும் சிறிது காலத்துக்கு ரத்து செய்யப்படுகிறது. பள்ளத்தாக்கு பகுதிகளில் நடந்த போராட்டங்களை தடுக்க ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் காயங்களை தவிர்ப்பதற்காக படையினர் மிகுந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்கின்றனர்’ என்று தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் அடையாளம் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படும் என்று கூறிய சத்யபால் மாலிக், அடுத்த 3 மாதங்களில் மாநில இளைஞர்களுக்கு 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டதால் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும், இது அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்