குளிர் சாதனப் பெட்டியில் வைத்து 91 வயது முதியவர் கடத்தல்

91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்ற வீட்டு வேலைக்காரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-09-03 05:46 GMT
தெற்கு டெல்லியில்  வயதான தம்பதி   கிருஷ்ணன் கோஷ்லா (வயது 91), அவரது மனைவி சரோஜா கோஷ்லா (87) வசித்து வந்தனர். பீகாரைச் சேர்ந்த கிஷன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வந்தார்.  கிருஷ்ணன் வேலை வாங்கிய விதத்தால் வேலைக்காரன் கிஷன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன்  கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் 5 பேரின் உதவியோடு அடித்து சுயநினைவு இழக்கச் செய்ததாக சொல்லப்படுகிறது.

பின் டெம்போவில் குளிர் சாதனப் பெட்டியை எடுத்து வந்து அதனுள் கிருஷ்ணனை வைத்து கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டிற்கு வெளியே டெம்போவில் குளிர்சாதன பெட்டியுடன் காணப்பட்டார். வாட்ச்மேன்  கிஷனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் குளிர்சாதன பெட்டியை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்வதாக கூறி உள்ளார்.

கடத்தப்பட்ட 91 வயதான கிருஷ்ணனையும், கடத்தியதாகக் கூறப்படும் கிஷனையும் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், குளிர்சாதன பெட்டியை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட டெம்போ பிரதீப் ஷர்மாவின் வீட்டிற்கு வெளியே இருந்து மீட்கப்பட்டது.  குளிர்சாதன பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு கிருஷ்ணன் மீட்கப்பட்டார்.

கிஷனைத் தவிர, தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபுதாயல் ஆகிய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்