மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம்: டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்த டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-09-06 17:28 GMT
புதுடெல்லி,


டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. மேலும் 3 மாதங்களுக்குள் இது நடைமுறைக்கு வரும் என்று கடந்த ஜூன் மாதம் முதல்-மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்தார்.

இந்நிலையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் குறித்து சமூக ஆர்வலர் மகேஷ்சந்திரா மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், 46,845 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 103.94 கிலோமீட்டர் தூரத்திலான நான்காவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேஸ் 4 திட்டத்தை நிறைவேற்ற தேவையான நில செலவினத்தை மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் ஏற்று கொள்ள வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதை எந்தவித தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன் நிலத்துக்கான ரூ.2,447.19 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மேலும் மெட்ரோ ரெயிலில் ஏன் இலவச பயணம்? அதனால் ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு? நீங்கள் (கெஜ்ரிவால் அரசு) மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கினால், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் லாபகரமானதாக இருக்காது. நீங்கள் அதை நிறுத்தாவிட்டால், நாங்கள் நிறுத்துவோம். கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என கருதாதீர்கள். மக்களுக்கு இலவசம் வழங்குவதை கைவிட்டு, அரசு பணத்தை சரியாக பயன்படுத்துங்கள். பொது நிதியை விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் செலவிட வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்